Search This Blog

Saturday, July 17, 2010

புனித கிளாரம்மாள் நவநாள்

முதல் மன்றாட்டு:
தந்தை மகன் தூய ஆவியரை விளங்கும் ஒ தூய மூவொரு இறைவா!
உம திருப்பெயரையும், உம வியத்தகு செயல்களையும் புகழ்கின்றோம்.
உமது அடியார் புனித கிளாரம்மாள் வழியாக பல நன்மைகளை திருச்சபைக்கு செய்து வருகின்றீர்.

அவர்
வழியாக நாங்கள் கேட்கும் மன்றாட்டுகளை அடைந்து தந்தருளும்.
சிறப்பாக அவரைப் போல உம் தூய அன்பில் நிலைத்திருந்து வாழ்ந்து நிலைவாழ்வின் பலனை அடைய அருள் தாரும். ஆமென்.
முதல் நாள்:
புனித கிளாரம்மாளே தூய பிரான்சிஸ் அசிசியின் முதல் பெண் சீடரே! அர்ப்பண வாழ்வுக்காகவும், எளிய தவ முயற்சிகளுக்காகவும் உமது உடைமைகளையும் புகழையும் உதறி விட்டு வந்தவரே! இறைவனிடம் இப்போது நாங்கள் வேண்டும் மன்றாட்டை எடுத்து சொல்லும் (..........)
நாங்களும் உம்மை போல இறை திருவுளப்படி வாழவும், அவரின் பராமரிப்பில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளவும் எங்களுக்காக மன்றாடும். ஆமென்.
இரண்டாம் நாள்:
புனித கிளாரம்மாளே நீர் உலகை துறந்தாலும் அதில் வாழும் ஏழைகளையும் கைவிடப்பட்டவர்களையும் காக்க மறக்கவில்லை. அவர்களுக்கு நீர் தாயாக இருந்து உம் உடைமைகளை எல்லாம் அவர்களின் நலனுக்காக அளித்தீர். அவர்களுக்காக பல புதுமைகளை செய்தீர்.
பல நிலைகளில் ஏழைகளாக வாழும் எங்களுக்கும் புதுமைகளை செய்யும் (.....)
நாங்களும் உம்மை போல் தான தர்மங்களில் சிறந்து விளங்க அருளை பெற்று தாரும். ஆமென்.
மூன்றாம் நாள்:
புனித கிளாரம்மாளே! உமது நிறுவனங்களை பல பதித படைகளில் இருந்து இறை வல்லமையால் காப்பாற்றியவரே! நாங்கள் வேண்டும் மன்றாட்டுக்களை இறைவனிடம் இருந்து பெற்று தாரும்(....)
எங்கள் ஆன்மாவுக்கும் உடலுக்கும் எதிராக நிகழும் அனைத்து போர்களில் இருந்தும் வெற்றி பெறவும், இறை அச்சம் கொண்டவர்களாகவும் நற்கருணை பக்தி உடையவர்களாகவும் வாழ்ந்து எங்கள் குடும்பங்களில் இறை அமைதி நிலைக்க செய்யவும் எமக்கு ஆற்றலை பெற்று தரும். ஆமென்.
நான்காம் நாள்:
புனித கிளாரம்மாளே 'ஒளி' என்று பொருள்படும் பெயர் கொண்டவரே! எங்கள் ஆன்ம உள்ளத்தில் மண்டிக்கிடக்கும் இருளை ஓட்டும். இதனால் நாங்கள் இறைவனின் விருப்பத்தை கண்டுணர்ந்து அதன்படி வாழ்வோமாக. உம் பிறப்புக்கு முன்பாக ஒரு குரல் நீர் இவ்வுலகின் இருளை அகற்றுவீர் என்று முழங்கியதாமே! இவ்வுலக வாழ்வில் எங்களுக்கு ஏற்படும் அனைத்து துயரங்களிலும் உபாதைகளிலும் எங்களுக்கு ஒளியாக வந்து எங்களை விண்ணக ஒளியில் சேர்த்தருளும். ஆமென்.

ஐந்தாம் நாள்:
புனித கிளாரம்மாளே உமது தூய உள்ளம் இந்த உலகம் முழுவதையும் அன்பு செய்யும் அளவிற்கு பெரியதாக இருந்தது. எங்களை அன்பு செய்யும் நீர் எங்கள் மன்றாட்டை இறைவனிடம் எடுத்து செல்லும் (....).
நாங்கள் பாவம் நோய் முதலிய அனைத்து தீவினையிலிருந்தும் விடுதலை பெற்று தூய கிறிஸ்தவ வாழ்வு வாழ்வோமாக. எங்கள் குடும்பங்களில் உள்ள அனைத்து குழந்தைகளுக்காகவும், இளைஞர்களுக்காகவும், பெரியோர், முதியோருக்காகவும், மன்றாடும். எம் குடும்பங்களில் ஒற்றுமை நிலைக்கவும் அமைதி ஓங்கவும் மன்றாடும். மேலும் துன்புறும் அனைத்து உள்ளங்களுக்கும் ஆறுதலை பெற்று தாரும். ஆமென்.

ஆறாம் நாள்:
புனித கிளாரம்மாளே! நீர் இறைவனின் பணி செய்ய அனைத்து உலக இன்பங்களையும் துறந்தீர். நாங்களும் எங்கள் வாழ்வை எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய எம்மை தூண்டும்.
ஆன்மாக்களின் மேல் அக்கறை கொண்டவரே, ஆன்மாக்களின் மீட்பிற்காக உம்மையே தகன பலி ஆக்கியவரே! நாங்களும் துன்பகளை பொறுமையுடன் ஏற்கும் வலிமையை இறைவனிடம் இருந்து பெற்று தாரும். ஆமென்.

ஏழாம் நாள்:
புனித கிளாரம்மாளே திருச்சபையின் தூணே! நம்பிக்கையுள்ள மலரே! விசுவாசத்தின் சாட்சியே! புனித திருச்சபைக்காக மன்றாடும். தூய திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரின் பணிகளிலும் ஆதரியும்.
உமது பரிந்துரையால் திருச்சமையில் காணப்படும் அனைத்து வித்தியாசங்களையும் களைந்து, இறைவார்த்தை நெறியிலும், நற்கருணை காட்டும் படிப்பினையிலும் நாங்கள் அனைவரும் சிறந்து விளங்கும் ஆற்றலை பெற்று தாரும். ஆமென்.

எட்டாம் நாள்:
புனித கிளாரம்மாளே
நற்கருணை பக்தியால் பல பகைவர்களை தோல்வியடைய செய்தவரே! நாங்களும் நற்கருணை பக்தியில் சிறந்து விளங்க செய்தருளும். எங்கள் நாட்டை மறைமாவட்டத்தை பங்கை ஆசீர்வதியும். நற்கருணை நாதர் உம்மிடம் " நான் உன்னை என்றும் பராமரிப்பேன்" என்று வாகுறுதியளித்தது போல எங்களுக்கும் 'உலகம் முடியும் மட்டும் எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்' என்று வாக்களித்துள்ளார். அவரின் உடனிருப்பில் நம்பிக்கை கொண்டு வாழும் வரம் தாரும். எங்களுக்கு இவ்வுலக வாழ்வில் துணையாக இருந்து, மறுவுலக வாழ்வுக்கு வழிகாட்டும். ஆமென்.

ஒன்பதாம் நாள்:
புனித கிளாரம்மாளே நீர் உமது ஜெப வாழ்வாலும் தவ முயற்சிகளாலும், உம் வாழ்வை பலனடைய செய்தீர். நாங்களும் உம்மை போல் வாழ்ந்து இறுதி நாளில் இறைவனை முகமுகமாய் காணும் வரமடைந்திட செய்யும். எங்கள் அனைத்து செயல்களிலும் இறைவனின் வல்லமையை பெற்று அவரில் நம்பிக்கை கொண்டு அவரின் மகிமைக்காக வாழும் வரமடைய செய்யும். ஆமென்.


இறுதி மன்றாட்டு:
இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி
புனித கிளாரம்மாளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக:
இறைவா புனித புனித கிளாரம்மாளின் நவநாளை சிறப்பிக்கும் உம் ஊழியர்களாகிய நாங்கள் அவரை போல் வசவும் அவர் காட்டிய நெறியில் பக்தியுடன் நிலைத்திருக்கவும் வேண்டிய வரங்களை தந்திட எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.