Search This Blog

Thursday, June 24, 2010

புனித அல்போன்சா நவநாள்

புனித அல்போன்சா பக்தி மாலை

தொடக்க
மன்றாட்டு
தூய
ஆவியே எழுந்தருளி வாரும். உமது கொடைகளை பொழிந்து எங்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்துவீராக. மோட்ச வீட்டின்மீதான நம்பிக்கையில் எங்களை வழிநடத்தும். எங்கள் இதயங்களை இறையன்பால் பற்றி எரிய செய்வீராக.
புனித அல்போன்சாவே நீர் புண்ணிய வழியில் நடந்து சென்றது போல எங்களையும் நல்வழியில் நடத்தியருளும். நாங்கள் தாழ்ச்சியிலும், எளிமையிலும் பிரமாணிக்கத்துடன் உமக்கு ஊழியம் புரிந்து புனிதத்திலும் விவேகத்திலும் தெய்வபயத்திலும் நாளுக்கு நாள் முன்னேற இறைவனை மன்றாடும். ஆமென்.

புனித அல்போன்சா செய்த செபம்:
"ஓ என் ஆண்டவராகிய இயேசுவே உம் திருஇதயத்தின் காயத்தினுள் என்னை நீர் மறைப்பீராக. அன்பும் மதிப்பும் பெறுவதற்கான ஆசையினின்று என்னை நீர் விடுவித்தருளும். பேரும் பெருமையும் தேடுவதற்கான முயற்சியினின்று என்னை காப்பாற்றும். நான் சிறு அணுவளவேனும் உம் திரு இதயத்தினது அன்புத்தீயின் ஒரு பொறியும் ஆகும் வரையில் என்னை நீர் தாழ்த்துவீராக. எல்லாப் படைப்புக்களையும் என்னையுமே மறந்துவிடுவதற்கான அருளை எனக்கு தந்தருளும். சொல்ல முடியாத இன்பமாகிய இயேசுவே உலக ஆறுதல்கள் அனைத்தையும் எனக்கு கசப்பாக மாற்றியருளும். நீதியின் கதிரோனாகிய என் இயேசுவே உம் திருகதிர்களால் என் உள்ளத்துக்கு தெளிவையும் புத்திக்கு ஒளியையும் அளித்து என் இதயத்தை தூய்மைபடுத்துவீராக. உம்மீது கொண்ட அன்பினால் என்னை எரிய செய்து உம்முடன் என்னை சேர்த்துக்கொள்ளும். ஆமென்.

முதல் வாசகம்:

இறைவேண்டல்
முதல்: ஆண்டவரே உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கிறேன்.
எல்: நான் வெட்கமுற விடாதேயும்; என் பகைவர் என்னைக் கண்டு நகைக்க விடாதேயும்.
முதல்: உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும் வேட்கமுறுவதில்லை; காரணமின்றி துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர்.
எல்: ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறிய செய்தருளும், உம் வழிகளை எனக்கு கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்கு கற்பித்தருளும், ஏனெனில் நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கிறேன்.
முதல்: ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைத்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.
எல்: என் இளமை பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும், ஏனெனில் ஆண்டவரே நீரே நல்லவர்.
முதல்: ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியை கற்பிக்கின்றார்.
எல்: எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்கு தமது வழியை கற்பிக்கின்றார்.
ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போருக்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளவனாய் விளங்கும்.
முதல்: பிதாவுக்கும் சுதனுக்கும் தூய ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.
எல்: ஆதியில் இருந்தது போல இபோழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.

நற்செய்தி வாசகம்:


புனித
அல்போன்சாவிடம் செபம்:
புனித அல்போன்சாவே! நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பாடுகளிலும், மரணத்திலும், உயிர்ப்பிலும் பங்குகொண்ட நீர், எங்கள் மத்தியில் இருந்து தேர்ந்துகொள்ளப்பட்டீர். புண்ணியத்தில் வளர்ந்த நீர் இறைவனால் புனித நிலைக்கும் மோட்ச பாக்கியத்திற்கும் அழைத்துக்கொள்ளப்பட்டீர் .
எங்களின் துன்பங்களிலும் துயரங்களிலும் இறைவனிடம் எமக்காய் பரிந்து பேசும். ஓ துன்பங்களால் தூய்மை அடைந்த தூயகமே! உம்மை போல் நாங்களும் இறைவனை முற்றிலும் சரணடைந்து தூய வாழ்வு வாழ வழிநடத்தும்.
கிறிஸ்துவின் பாடுகளுக்காகவும், எம் பாவங்களின் மன்னிப்பிற்காகவும், அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்காகவும், மீட்பிற்காகவும் எங்கள் துன்பங்களை பொறுமையோடு ஏற்று இறை மகிமைக்காக வாழும் வரம் தாரும். ஆமென்.

விசுவாசிகளின் மன்றாட்டு:
அன்பார்ந்தவர்களே இறைவன் தம் புனிதர்கள் வழியாக பல புதுமைகளை செய்து வருகின்றார். நம் மண்ணின் புனிதை புனித அல்போன்சாவின் பரிந்துரையை மிகுந்த மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் நாடுவோம்.
  1. இறைவா நீர் புனித அல்போன்சாவை புனித நிலைக்கு உயர்த்தினீர். நாங்களும் தூய வாழ்வு வாழவும், இறைவேண்டுதளிலும், பக்தி முயற்சிகளிலும் மென்மேலும் வளர தூய்மையின் ஆவியை புதுப்பிக்கும் ஆவியை எம்முள்ளே படைத்தருள வேண்டுமென்று தூய அல்போன்சா வழியாக இறைவா உம்மை வேண்டுகிறோம்.
  2. புனித அல்போன்சா நோயின் மிகுதியிலும் கொடிய வாதைகளிலும் இறைநம்பிக்கையில் உறுதியாய் நிலைத்திருந்தது போல, நாங்களும் துன்ப துயரங்களில் இறைவனின் திருவுளத்தை ஏற்று வாழ வரமருள வேண்டுமென்று தூய அல்போன்சா வழியாக இறைவா உம்மை வேண்டுகிறோம்.
  3. அன்பு இயேசுவே நீர் எம் பாவங்களுக்காக உம்மையே அன்று கல்வாரியில் பலியாக்கினீர். புனித அல்போன்சா உம்மைப்போல் பிறருக்காக தம்மையே தகன பலியாக்கினார். நாங்களும் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் பிறருக்காக வழங்கும் மனம் தந்தருள வேண்டுமென்று தூய அல்போன்சா வழியாக இறைவா உம்மை வேண்டுகிறோம்.
  4. எம்மை காக்க வந்த இயேசுவே நீர் உம் பாடுகளின் பயணத்தில் " தந்தையே என் விருப்பப்படியல்ல ஆனால் உம விருப்பப்படியே ஆகட்டும்" என்று கூறியது போல புனித அல்போன்சாவும் இறைதிருமுறைபடி வாழ்ந்தார். நாங்களும் அனைத்து செயல்களிலும் திருமறையின் படிப்பினைகளின்படி வாழவும், இறைவனின் அதிமிகு மகிமைக்காக உழைக்கவும் வரமருள வேண்டுமென்று தூய அல்போன்சா வழியாக இறைவா உம்மை வேண்டுகிறோம்.
  5. அன்பின் இறைவா புனித அல்போன்சா அனைத்து மாணாக்கர்மீதும்அன்பும்பரிவும் கொண்டிருந்தார். அனைத்து மாணவ மாணவியரையும்ஆசீர்வதித்துநல்வழி நடத்த வேண்டுமென்று தூய அல்போன்சா வழியாகஇறைவா உம்மைவேண்டுகிறோம்.
(நமது தனிப்பட்ட தேவைகளுக்காக வேண்டுவோம்)

இறைவா உமது அளவில்லாத மகிமைகளுக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் புனித அல்போன்சாவை எங்கள் முன்மாதிரியாகவும், பாதுகாவலியாகவும் தந்தீரே! அவரின் பரிந்துரையால் நாங்கள் அன்பிலும், இரக்கத்திலும் சிறந்தவர்களாய் வாழ்ந்து இறையரசின் விழுமியங்களின்படி வாழ வரமருள வேண்டுமென்று எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகிறோம். ஆமென்.


வாசகங்கள்:
  1. துன்புறும் ஊழியர் - எபிரேயர்: 12/4 - 6 <> மாற்கு: 8/31 - 38
  2. முழு அர்ப்பணம் - பிலிப்பியர்: 3/7 - 11 <> மத்தேயு: 19/16 - 26
  3. இறையன்பு - உரோமையர்: 8/31 - 39 <> யோவான்: 15/1 - 17
  4. சகோதர அன்பு - 1 யோவான்: 3/11 - 24 <> லூக்கா: 10/25 - 37
  5. தாழ்ச்சி - பிலிப்பியர்: 2/5 - 10 <> லூக்கா: 14/7 - 11
  6. இறை பிரசன்னம் - உரோமையர்: 10/8 - 13 <> லூக்கா: 12/22 - 32
  7. இறை நம்பிக்கை - எபிரேயர்: 10/19 - 24 <> மத்தேயு: 7/7 - 12
  8. அன்னைமரி பக்தி - திருத்தூதர் பணி: 1/12 - 14 <> யோவான்: 19/25 - 27
  9. விண்ணக வாழ்வு - 1 பேதுரு: 1/13 - 15 <> யோவான்: 14/1 - 7

No comments:

Post a Comment